search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
    • மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

    இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.

    மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.

    அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

    இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

    இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.33 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.22 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.06 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.27 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
    • உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து 100 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

    நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதிய நேரம் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெப்ப காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இது தொடர்பான வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்த்து நீர் மோர் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்யப் போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.08 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 34 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.10 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.34 அடியாகவும் குறைந்து உள்ளது.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் ரவுண்டானா பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களை விசாரணைக்காக சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவில் (28) என தெரிய வந்தது. 2 பேரும் தற்போது ஈரோடு கொல்லம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக குட்கா பொருட்கள் கொண்டு வந்து ஈரோடு, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள சின்ன, சின்ன வியாபாரிகளுக்கு விற்றது தெரியவந்தது. காரில் மொத்தம் 80 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.
    • பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்தனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தது.

    இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அளவுமயான வசதி இல்லை. மேலும் சிலர் மயான பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இப்பகுதியில் 4 சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் 4 சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இரு பகுதிகளிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், கோசணம் ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் கோபி நம்பியூர் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×