search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனிமவள கொள்ளையை தடுக்க சட்டமன்றத்தில் ஒருமித்த குரல் கொடுங்கள் - முன்னாள் எம்.எல்.ஏ.  வேண்டுகோள்
    X

    கனிமவள கொள்ளையை தடுக்க சட்டமன்றத்தில் ஒருமித்த குரல் கொடுங்கள் - முன்னாள் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

    • தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது.
    • கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கூறியுள்ளார்.

    கடையம்:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது. இதனை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் ஒருமித்த குரல் கொடுத்து வருங்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    கவன ஈர்ப்பு தீர்மானம்

    கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த கூட்ட தொடரிலேயே இதுபோன்று அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

    கனிமவள கொள்ளை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை தடை செய்ய அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பூஜ்யம் நேரம் என்று சொல்லக்கூடிய நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சபாநாயகரிடம் சிறப்பு அனுமதி வாங்கி பேசலாம்.

    தடை செய்ய கோரிக்கை

    கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை தொழில் துறையின் கீழ் வருவதால் அத்துறை மானிய கோரிக்கையின் போது இதுகுறித்து பேசி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். கனிமவள கடத்தலால் அரசுக்கு ஏற்படுகின்ற பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மானிய கோரிக்கையிலும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.

    அளவுக்கு மீறிய பாரத்தை கனரக வாகனங்களில் ஏற்றி சாலைகளில் செல்வதால் சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின்போதும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.

    இப்படி பல வழிகளில் முயற்சி செய்து கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். இதை மனதில் கொண்டு சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள். அதன் மூலம் நமது இயற்கை வளம் காக்கப்படட்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×