search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக புகார்- மாணவர்கள் சாலைமறியல்
    X

    அரசு பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக புகார்- மாணவர்கள் சாலைமறியல்

    • கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வருபவர்கள் பெரும்பாலனோர் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் மாணவ, மாணவிகள் பயணித்து கல்லூரி, வீடுகளுக்கு செல்வது சிரமமாக உள்ளது.

    இருப்பினும் பல்வேறு இன்னல்களை தாண்டி மாணவ, மாணவிகள் கல்வி பயில கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பஸ்களை துரத்தி சென்று ஏறும் நிலையும், மாணவிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்லும் நிலையும் ஏற்பட்டது.

    கல்லூரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ந்து அரசு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்றாமல் சென்றது.

    இதனை கண்டித்தும், பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி எதிரே உள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி. காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு பஸ்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். திடீர் சாலைமறியலால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×