search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    முத்துப்பேட்டையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

    முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×