search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குன்னூர் அருகே குட்டி யானை பலியானது எப்படி?- வனத்துறையினர் விசாரணை
    X

    குன்னூர் அருகே குட்டி யானை பலியானது எப்படி?- வனத்துறையினர் விசாரணை

    • கோழிக்கரை பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தது
    • குட்டியை தேடி தாய் வருவதால் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. எனவே கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கோழிக்கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குட்டி பெண் யானை மர்மமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் குட்டி யானை சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் தேவராஜ், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் முன்னிலையில் முதுமலை தெப்பக்காடு கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார்.

    குட்டியானையின் இறப்பு தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    கோழிக்கரை பகுதியில் குட்டி யானை இறப்பு குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்றோம். அப்போது சடலத்தை சுற்றிலும் 3 பெரிய யானைகள் நின்றன. பின்னர் அவை தாமாகவே அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டன.

    இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தோம். பின்னர் அந்த யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    மலைச்சரிவில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அந்த குட்டி யானை கால்தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இதற்கிடையே பலியான குட்டியின் தாய் யானை அடிக்கடி சம்பவ இடத்துக்கு வந்து செல்வதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×