search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலையில்பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகளில் மின் விளக்குகள் பொருத்த முடிவு
    X

    மருதமலையில்பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகளில் மின் விளக்குகள் பொருத்த முடிவு

    • அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • வாகனங்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    வடவள்ளி,

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. அன்று காலை கோபூஜை செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடக்கிறது.

    முன்மண்டபத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதனை தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. 5-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வடவள்ளி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய பாத யாத்திரை சென்று வருகிறார்கள். இதனால் மலைப்படிக்கட்டுகள் முழுவதும் மின் விளக்குகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வாகனங்களளையும் அடிவாரத்தில் நிறுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் நிலம் சுத்தப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர 3 இடங்களில் மருத்துவ முகாமும் அமைக்கப்படுகிறது.

    மேலும் உடல் உபாதைகள் கழிப்பதற்காக ஆங்காங்கே மொபைல் டாய்லெட்டும் அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, சோமையம்பாளையம் ஊராட்சி செயலர், மருத்துவ துறை, மருதமலை கோவில் அதிகாரிகள், மருதமலை கவுன்சிலர், வடவள்ளி காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் பேரூர் சரக துணைக்கண்காணிப்பாளர் தலையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×