search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை: நகை-பணம் கொள்ளை
    X

    மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை: நகை-பணம் கொள்ளை

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார்.

    இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கன்னியம்மாள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளைபோய் இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தன. மர்ம கும்பல் கன்னியம்மாளை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். மோப்பநாய் டைகர் கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது. அங்கிருந்து வாகனத்தில் கொலை கும்பல் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே அவரது இட்லி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×