search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே குழந்தையிடம் செயின் பறித்த வாலிபர் கைது
    X

    குளச்சல் அருகே குழந்தையிடம் செயின் பறித்த வாலிபர் கைது

    • வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • காமிராவில் சிக்கிய ஒரு வாலிபரின் உருவத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் துப்பு துலக்கினர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது 37). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி டெனிலா (33). இவர் 5 நாட்களுக்கு முன்பு தன்னுடைய 3 வயது பெண் குழந்தை இவாலினாவுடன் குறும்பனை திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார். மதிய வேளையில் மண்டபத்தின் முன்பு உள்ள மைதானத்தில் குழந்தை இவாலினா விளையாடி கொண்டிருந்தது. அப்போது மண்டபத்தின் முன் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபம் நோக்கி வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென குழந்தையின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    இதைப்பார்த்தவர்கள் சத்தம் போட்டனர். அதற்குள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதனால் திருமண மண்டபம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டெனிலா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குழந்தையிடமிருந்து செயினை பறித்து சென்ற வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். காமிராவில் சிக்கிய ஒரு வாலிபரின் உருவத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார், அந்த வாலிபர் குறித்து துப்பு துலக்கினர். காமிராவில் சிக்கிய உருவம் மற்றும் அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவெண் அடிப்படையில் குழந்தையிடமிருந்து நகை பறித்து சென்ற வாலிபர் கோணங்காடு அருகே குளப்பாடை சேர்ந்த அருண் ஜஸ்டின் (25) என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து நகையை மீட்டனர். பின்னர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×