search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையங்களில் ரூ.16½ கோடியில் மேம்பாட்டு பணிகள்
    X

    நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையங்களில் ரூ.16½ கோடியில் மேம்பாட்டு பணிகள்

    • பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
    • ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சேவையாக ரெயில்வேத்துறை உள்ளது. இதனாலேயே ரெயில்வே துறையை மத்திய அரசு நவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு ரெயில் நிலையங்கள் புனர மைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல குமரி மாவட்டத்தி லும் கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்கள் மேம்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    அந்த வகையில் நாகர்கோ வில் ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதிகள் தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப்பட உள்ளன.

    இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    நாகர்கோவிலில் அடிக்கல் நாட்டு விழாவானது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் எஸ்.எம்.சர்மா தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

    விஜய்வசந்த் எம்.பி. பேசுகையில், "நாகர்கோவில் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் டவுன் ரெயில் நிலையத்தையும் நவீனப்படுத்த வேண்டும். குமரி மாவட்ட மக்கள் அதிக அளவு ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அதற்கு ஏற்றார் போல கூடுதல் ரெயில்களை குமரி மாவட்டத்துக்கு இயக்க வேண்டும்" என்றார்.

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி உலக நாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும் ரெயில் சேவையை நவீனப்படுத்தி வருகிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மேயர் மகேஷ் பேசுகையில், " குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரம் 3 முறை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தினசரி ரெயிலாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி- நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருநெல்வேலி இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரெயில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மீண்டும் கோவை வருகிறது.

    எனவே அந்த ரெயிலை நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, திருச்சி வழியாக இயக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்." என்றார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் மந்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×