search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறு பகுதியில் போதையில் தள்ளாடும் சுற்றுலா பயணிகள்
    X

    சிற்றாறு பகுதியில் போதையில் தள்ளாடும் சுற்றுலா பயணிகள்

    • போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
    • பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அங்கு குளிக்க இறங்குவதால் உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதுடன் கேரள மாநிலத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வட்டகோட்டை, சொத்தவளை பீச் பகுதிகளிலும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரை அருகில் அமர்ந்து அழகை ரசித்து வருகிறார்கள். சிற்றாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில் சீசன் ரம்மியமாக உள்ளது.

    இதனால் அங்கு வரக் கூடிய சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அணை பகுதிக்கு வரும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அங்கு குளிக்க இறங்குவதால் உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. இந்த மாதத்தில் 12 வயது சிறுவனும், 26 வயது வாலிபர் ஒருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துவதுடன் போதை பொருட்களையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மது போதையில் தள்ளாடும் வாலிபர்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறப் படுகிறது. மிகப்பெரிய ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடியாக அந்த பகுதி யில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதோடு சுற்றுலா பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×