search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றார் அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
    X

    சிற்றார் அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்

    • சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. முக்கியமாக சைக்கிள் மற்றும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன.
    • குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மூடை நெல்லுக்கு ரூ.40 கமிஷன் பெறப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வசந்தி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் அரவிந்த் விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகளின் விவரங்கள் வருமாறு:-

    சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. முக்கியமாக சைக்கிள் மற்றும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன.

    குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மூடை நெல்லுக்கு ரூ.40 கமிஷன் பெறப்பட்டது. அதுவே கடந்த மார்ச் மாதத்தில் ரூ.35 வாங்கப்பட்டது. இதற்காக எந்த ரசீதும் கொடுப்பது இல்லை. மேலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் மார்க்கெட்டில் நெல்லுக்கு நல்ல விலை இருக்கிறது. நெல் பயிர்களுக்கு திரவ வடிவிலான யூரியா அடிக்கலாமா? மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலையம் இந்தியாவிலேயே கேரளா வில் மட்டும் தான் உள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு அங்கிருந்து வழங்கப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சிகள் தான் குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டது. இந்த நிலையில் புதிய ரக மரவள்ளி கிழங்குகள் அங்கு உள்ளன. எனவே அவற்றின் குச்சிகளை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும். இல்லை எனில் குமரி மாவட்ட தோட்டக்கலை துறை மூலமாக மரவள்ளி கிழங்கு குச்சிகளை உற்பத்தி செய்து தர வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்த வேண்டும். பழத்தோட்டம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விழா கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாய பிரதிநிதிகள் கூறினர்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. குருந்தன்கோடு நள்ளிக்குளம் கரை அருகே முள்வேவி அமைத்து இருப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மில்லுக்கு நெல் மூடைகளை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்காக பணம் கேட்டு இருக்கலாம். நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்தால் விவசாயிகள் தங்களது நெல்லை மார்க்கெட்டிலேயே விற்பனை செய்யலாம். நெல் பயிர்களுக்கு திரவ வடிவிலான யூரியாவை பயன்படுத்தலாம். கேரளாவில் இருந்து புதிய ரக மரவள்ளி கிழங்கு குச்சிகள் வெளியிடப்பட்டதும் அது பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். கிஷான் மேளா நடத்தப்படும் போது விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    முன்னதாக திருவட்டார் மாத்தாரை சேர்ந்த இயற்கை விவசாயி மைக்கேல் என்பவர் தான் இயற்கை முறையில் விளைவித்த சீனிக்கிழங்கு மற்றும் சிகப்பு வாழைப்பழம் ஆகியவற்றை கலெக்டரிடம் காண்பித்தார். அந்த சீனி கிழங்கு வழக்கமான சீனிக்கிழங்கை காட்டிலும் அதிக எடை இருந்தது. அதாவது ஒரு கிழங்கு சுமார் 3 கிலோ வரை எடை இருந்தது. இதையடுத்து அந்த விவசாயியை கலெக்டர் அரவிந்த் பாராட்டினார்.

    Next Story
    ×