search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி திருவிழாவையொட்டி கொலுமண்டபத்தில் எழுந்தருளிய கன்னியாகுமரி பகவதி அம்மன்
    X

    நவராத்திரி திருவிழாவையொட்டி கொலுமண்டபத்தில் எழுந்தருளிய கன்னியாகுமரி பகவதி அம்மன்

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் தியாக சவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்து உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி தனது தோளில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலுமண்டபத்துக்கு எடுத்துச்சென்றார். அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர்.

    அதன்பிறகு கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அந்த கொலுமண்டபத்தில் ஏராளமான கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு அலங்கரித்து வைத்திருந்த கொலுவையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 10 நாட்களும் காலை 10 மணிக்கு நடக்கும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து காசி விஸ்வநாதர் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு கோவில் முன்பு நிறுத்தி வைத்திருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது லெள்ளிக்குடத்தில் புனித நீர் வைத்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு முன்னிலையில். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்குரதவீதி, நடுத்தெரு, தெற்குரதவீதி, சன்னதிதெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    Next Story
    ×