search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியது - விவசாயிகள் கவலை
    X

    தோவாளை பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியது - விவசாயிகள் கவலை

    • தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக சானலில் தண்ணீர் விடவில்லை
    • முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை பாசனத்தை நம்பியும் குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். 6000 ஹெக்டேரில் மாவட்ட முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு பகுதிகளில் அறுவடைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.ஆனால் ஒரு சில பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.

    ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக தோவாளை சானலில் தண்ணீர் விடவில்லை. தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை போர்க்கால அடிப்படையில் கடைமடை பகுதியில் வரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடு என சரிந்து வருகிறது. பேச்சிபாறை நீர்மட்டம் இன்று காலை 17.65 அடியாக உள்ளது.அணைக்கு 381 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.75 அடியாக உள்ளது.அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க பாசன குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளில் கவலை ஏற்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×