search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வியாபாரிகள் போராட்டம்-போலீஸ் குவிப்பு
    X

    நாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வியாபாரிகள் போராட்டம்-போலீஸ் குவிப்பு

    • இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன
    • காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் மேற்கூரை அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம் மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது சந்தையின் ஒரு புறத்தில் இருந்த பொருட்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினார்கள்.

    மறுபுறத்தில் இருந்த பொருட்களை மாற்றவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் முதலில் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு செட் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு கடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். ஆனால் வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டு வந்திருந்த ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் தரப்பில் நாங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரையின் கீழ் பொருட்கள் எதுவும் வைக்க மாட்டோம். அப்படி பொருட்கள் எதுவும் வைத்தால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை எடுத்து செல்லுங்கள் ஆனால் மேற்கூரைகளை அகற்றக்கூடாது என்று கூறினார்கள்.

    இதையடுத்து அதிகாரிகள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மேற் கூரைகளை அகற்றாமல் சென்றனர்.தொடர்ந்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், "ஏற்கனவே கொரோனா காலத்துக்கு பிறகு நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கூரைகளை அகற்றுவது எங்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும். நாங்கள் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து மேற் கூரைகளை அமைத்துள்ளோம். மேற்கூரைகளை அகற்றுவதால் காய்கறிகள் வெயிலில் நாசமாகி விடும். எனவே இதை அகற்ற கூடாது" என்று தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×