search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 400 இடங்களில் நாளை சிறப்பு முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் 400 இடங்களில் நாளை சிறப்பு முகாம்

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
    • பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நாளை (24-ந்தேதி) முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவ விநியோகத்தை குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் சுமார் 3 லட்சத்து 4 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றுக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதிக்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    500 ரேஷன் கார்டுகளுக்கு குறைவாக உள்ள முகாம்களில் 4 பேரும் அதற்கு மேல் ரேஷன் கார்டு உள்ள முகாம்களில் 5 முதல் 10 ஊழியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கலைஞர் உரிமைத்திட்ட முகாமிற்கு செல்லும்போது விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×