search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை தடுப்பில் வாகனம் மோதியதில் டிரைவர் பலி
    X

    சாலை தடுப்பில் வாகனம் மோதியதில் டிரைவர் பலி

    • தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • வெள்ளமடம் பகுதியில் இன்று மீண்டும் விபத்து

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் முக்கியமான பகுதியாக ஆரல்வாய்மொழி உள்ளது. இங்குள்ள வெள்ளமடம், குமாரன்புதூர், சகாய நகர் பகுதியில் வளைவுகள் அதிகம் உள்ளன.

    இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆடல்-பாடல் குழுவினர், திருச்செந்தூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது, சகாயநகர் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. சாலையின் எதிர்புறம் பாய்ந்த வேன் அரசு பஸ் மீது மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, விசுவாசபுரம், சகாய நகர் விலக்கு, குமரன் புதூர், வெள்ள மடம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே சிமெண்ட் கல் கொண்டு தடுப்புகள் (சென்டர் மீடியன்) அமைத்தனர். இதனால் விபத்துக்கள் குறையும் என கருதப்பட்டது. ஆனால் பாதுகாப்பு என வைக்கப்பட்ட தடுப்பு விபத்துக்கு மேலும் காரணமாக அமைந்து விட்டது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி வந்த வேன், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் போன்றவை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நடந்த சூழலில் இன்று மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதன் டிரைவர் பலியாகி விட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை ஒரு பால்வண்டி புறப்பட்டது. அதனை மேலநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் நம்பிபாலன் (வயது27), ஓட்டி வந்தார்.கிளீனராக யேசுராஜ் இருந்தார். இந்த வேன் வெள்ள மடம் அருகே உள்ள விசுவாசபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற வேன், தடுப்பு சுவர் கல்லில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனை பார்த்த பலரும் அங்கு ஓடிவந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் வேனை அவர்களால் மீட்க முடியவில்லை. வேனின் அடியில் சிக்கிக் கொண்ட டிரைவர் மற்றும் கிளீனர் கூச்சலிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆரல்வாய் மொழி போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து சுமார் 1½ மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த வேனை நிமிர்த்தினர். ஆனால் அதற்குள் டிரைவர் நம்பிபாலன் பரிதாபமாக இறந்து விட்டார். கிளீனர் யேசுராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    பலியான நம்பிபாலனுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய தலைமை காவலர் ராபின் வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் தொடர் விபத்துக்களுக்கு காரணமாகி வருவது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×