search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்
    X

    நாகர்கோவில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்

    • குடிநீருக்காக பேச்சிபாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
    • அமைச்சர் துரைமுருகனிடம் மேயர் மகேஷ் கோரிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    தற்பொழுது முக்கடல் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாகர்கோவில் நகரில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சுத்தம் செய்து அதன் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மாநகராட்சி மேயர் மகேஷ் கோரிக்கை வைத்தார்.

    இது தொடர்பாக அரசுக்கு எழுதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உறுதி அளித்தார். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் மகேஷ், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில், நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு குறைவாக உள்ளது. வருடம் தோறும் கோடை காலங்களில் குடிநீருக்காக பேச்சிபாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

    எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் கிடைப்பதற்கு முக்கடல் அணைக்கு பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் துரைமுருகன், இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    Next Story
    ×