search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நடந்தே வந்தார் - காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிபர்
    X

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நடந்தே வந்தார் - காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிபர்

    • பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர்
    • எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் சென்னையில் பணிபுரிந்தபோது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளார்

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக சுற்றித் திரிந்தார். கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள வங்கி களின் நடை பாதையில் பெரும்பாலும் இவர் அமர்ந்திருப்பது வழக்கம். எப்பொழுதும் ஆங்கில பத்திரிகைகளை கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பார். அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வழங்குகின்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அப்போது மன நலம் பாதித்த நிலையில் அந்த பகுதியில் அழுக்கு துணியுடன், வருடக் கணக்காக வெட்டப்படாத சடை முடியுடன் காணப்பட்ட அந்த நபரை கண்டதும் காணாமல் போன தமது உறவினராக இருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து உள்ளார். முதலில் பேச மறுத்த அவர் பின்னர் முருகனிடம் பேசத் தொடங்கி உள்ளார். அவரது ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்ததில் அவர் சந்தேகம் அடைந்த அதே நபர் என்று தெரிந்தது. உடனடியாக அவர் அந்தப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் அவரை அருகில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகளை வாங்கி அணிவித்தனர். பின்னர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள தென்மலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு முருகன் தகவல் கொடுத்தார்.மனநலம் பாதிக்கப்பட்டு 3ஆண்டுகளாக கன்னியாகுமரியில் இருந்த அந்த நபர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முத்து (வயது35) என்பது தெரியவந்தது. அவர் ராஜபாளையத்தில் தனது பி.காம் பட்டப்படிப்பையும் அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பையும் முடித்துஉள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துஉள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து "திடீர்"என்று காணாமல் போனார். இதுகுறித்து அவரதுஉறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதனால் சென்னை போலீசில் புகார் செய்தனர்.தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியைக் கைவிட்டனர். இந்த நிலையில்தான் நேற்று "திடீர்"என்று கன்னியாகுமரியில் அவர் இருப்பது தெரியவந்தது. அவரது உறவினர்கள் உடனடியாக கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விவரங்களை தெரிவித்தனர். போலீசார் உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து முத்துவின் சகோதரர் அய்யனார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது சகோதரர் முத்து கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் காணாமல் போனார். அவர் தன்னுடன் பயின்ற ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் தோல்வியின் காரணமாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரை காணாமல் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வந்தோம். கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற எங்கள் உறவினர் ஒருவர் மூலம் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டு நாங்கள் அழைத்து வந்துள்ளோம் என்றார். அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடந்தே வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உடன் பயின்ற ஒரு மாணவியை காதலித்ததாகவும் அந்த காதல் கைகூடாத தால் மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு ஆளானதாகவும் தெரிகிறது.

    எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் சென்னையில் பணிபுரிந்தபோது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளார். இவரது தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு உடன் பிறந்த 3 சகோதரர்களும் 3சகோதரிகளும் உள்ளனர் கன்னியாகுமரிக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்திருந்த தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் கடையாலுமூடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், கொற்றிகோடு தலைமை காவலர் ஜஸ்டின் ராஜ் மேலும் அந்தப்பகுதியை சேர்ந்த முஹம்மது, பாபு ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரை மீட்டு அவரை முடிவெட்டி, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த மனித நேய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×