search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 ஆண்டுக்கு பின்னர் கோலாகலம்  தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
    X

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்த காட்சி.

    5 ஆண்டுக்கு பின்னர் கோலாகலம் தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா

    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி குடிஅழைத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவில் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆத்தூர்:

    தம்மம்பட்டி கடைவீதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி குடிஅழைத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 14-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல், 15-ந் தேதி எட்டியான் முத்து சுவாமி பெருபூஜை, 16-ந் தேதி இச்சடியான் கோவில் பெரும் பூஜை, அதனை தொடர்ந்து 17-ந் தேதி சிறு தேர் முருகர் போடுதல், செல்லியம்மன் கோவில் பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து 21-ந் தேதி மாவிளக்கு பூஜை, 22-ந் தேதி மாரியம்மன் பொங்கல் வைத்தல், செல்லியம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று அதி காலை 4 மணி முதல் பக்தர்கள் கடைவீதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலை சுற்றி உருளு தண்டனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வந்தனர்.

    பின்பு ஸ்ரீ அம்மன் திருத்தேரில் அமர்த்துதல் நிகழ்ச்சியும், மதியம் தேர் வலம் வருதல் நடை பெற்றது. அப்போது குதிரை யில் எட்டியான் முத்து சுவாமியை பக்தர்கள் தூக்கிக்கொண்டு முன்னால் சென்றனர். அதனை பின்தொடர்ந்து ஸ்ரீ செல்லி யம்மன் தேர், ஸ்ரீ மாரியம்மன் தேர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் தேரை தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.

    இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்தத் தேர் திருவிழா நிகழ்ச்சியில் தேர் ஊர்வலம் தம்மம்பட்டி கடைவீதி, நடுவீதி மற்றும் குறும்பர் தெரு சென்று மீண்டும் கடைவீதி வழி யாக மாரியம்மன் கோவில் வளாகத்தை வந்து அடைந்தது. இந்நிகழ்ச்சியில் தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் உறவினர்களுடன் கண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தம்மம்பட்டி கோவில் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மாரியம்மன் கோவில் வளாகத்தில் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், செல்லியம்மன் திருப்பங்கள் வைத்தல் நடைபெற்றன. மாலை சாமி ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தம்மம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இந்த திருவிழாவில் செண்டா மேளம், குண்டு மேளம் பாரம்பரிய தப்பட்டை மற்றும் நாதஸ்வரம் மற்றும் குதிரை நடனம் ஆகிய இசைகளை பக்தர்கள் கேட்டு ரசித்தும் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    Next Story
    ×