search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே ஜெகநாத பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

    நாங்குநேரி அருகே ஜெகநாத பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

    • கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
    • 4-ம் நாளான இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி தாயார் உடனுறை ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. கோவில் சன்னதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் ஹோமங்கள் நடத்தப்பட்டது. கஜபூஜை, கோபூஜை தம்பதி பூஜை, கும்பஸ்தாபனம், வாஸ்து சாந்தி, சதூர்வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ம் நாளான இன்று அதிகாலையில் 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் கோவில் ஜெகநாதர், செண்பகவல்லி தாயார் சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் உள்பட பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×