search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் குப்பைகழிவுகளை கொட்டுவதால் மாசடையும் ஏரிகள்
    X

    காஞ்சிபுரத்தில் குப்பைகழிவுகளை கொட்டுவதால் மாசடையும் ஏரிகள்

    • மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள்.
    • நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இதில் 31 வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள 20 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்க முடியாத சூழ்நிலையில் 51 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தினம்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேக ரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நத்தப்பேட்டை கிடங்கில் கொட்டி அதனை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள். தற்போது மக்கள்தொகை பெருக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவு காரணமாக குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாநகராட்சி ஊழியர்கள் பலர் குப்பைகளை நத்தப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் கொட்டி வருகிறார்கள்.

    மேலும் வீடுகளில் இருந்து கழிவு நீர் அனைத்துமே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகின்றன. வழக்கமாக மழைக்காலங்களில் நத்தப்பேட்டை ஏரி, கொலவாய் ஏரி, ரெட்டேரி முழுமையாக நிரம்பினால் உபரி நீர் அருகில் உள்ள வையாவூர், கலியனூர், நெல்வாய் முத்தியால்பேட்டையில் உள்ள சிற்றேரி, தென்னேரிக்கு செல்லும். குப்பை கழிவுகளால் நத்தப்பேட்டை ஏரி மாசு அடைந்து வருவதால் அதன் அருகே உள்ள வையாவூர் ஏரியும் தற்போது மாசு அடைந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் கழிவு நீர் அங்கிருந்து நத்தப்பேட்டை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றடையும். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து நத்தப்பேட்டை ஏரியில் தண்ணீர் கலப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கால்வாயில் வரும் கழிவு நீர் அனைத்தும் அப்படியே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகிறது. இதனால் நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் வையாவூர் ஏரிக்கும் செல்வதால் அந்த ஏரி தண்ணீரின் நிலையும் மோசமடைந்து உள்ளது.

    நத்தப்பேட்டை ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய நீர் பச்சை மற்றும் கருப்பு நிறமாக மாறி வருவதால் அந்த தணணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாநகராட்சி குப்பை கிடங்கில் உரிய பராமரிப்பு செய்யவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் ரூ.93 லட்சம் அபராதம் விதித்தனர். ஆனால் இதுவரை அதனை செலுத்த முடியாமல் மாநகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் அபராதம் விதித்தும் தற்போது வரை ஏரியை அசுத்தம் செய்யும் பணியிலேயே மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஏரிநீர் மாசடைந்து வருவதால் பறவையின் வரத்தும் குறைந்து உள்ளது. இந்த ஏரியை ஒரு சுற்றுலாத்தலமாகவோ, படகு சவாரி தலமாகவோ மாற்றினால் பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.

    மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, மஞ்சள் நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நத்தப்பேட்டை மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.60 கோடிநிதி ஒதுக்கப்பட்டு

    உள்ளது. இதற்கான பணி விரைவில் நடைபெறும் என்றனர்.

    Next Story
    ×