search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீடுகளுக்கு சப்ளை செய்ய சென்றபோது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு டிரைவரின் சாமர்த்தியத்தால் நிறுத்தம்
    X

    சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அகற்றப்பட்ட காட்சி.

    வீடுகளுக்கு சப்ளை செய்ய சென்றபோது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு டிரைவரின் சாமர்த்தியத்தால் நிறுத்தம்

    • திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் ஈரமான மணல் பகுதியில் சாக்கை வைத்து சிலிண்டரை வைத்து கேசை முழுவதுமாக வெளியேற்றினார்.
    • டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும்விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து ஒரு மினி வேனில் 21 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் செந்தில் என்பவர் திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே சென்றபோது சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு வெளியேறிக்கொண்டே இருந்தது. இதை அருகில் இருந்த வாகனஓட்டுனர்கள் கண்டறிந்து செந்திலிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கசிவு ஏற்பட்ட சிலிண்டரை கீழே இறக்கினார். அதன்பிறகு ஈரமான மணல் பகுதியில் சாக்கை வைத்து சிலிண்டரை வைத்தார். பின்னர் மெதுவாக கேசை வெளியேற்றினார். அப்போது அப்பகுதி முழுவதும் புகையாக காட்சியளித்தது.

    சிலிண்டரில் இருந்து கேஸ் முழுவதும் வெளியானதை உறுதி செய்த பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தை அருகில் இருந்து பார்க்க பயந்து பலர் தலைதெறிக்க ஓடினர். இருந்தபோதும் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும்விபத்து ஏற்படாமல் தவிர்த்தார். அதன்பிறகு சிலிண்டரின் அடிபாகத்தை பார்த்தபோது அது துருபிடித்து கேஸ் வெளியேறும் அளவிற்கு தரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.

    ஒரு வேளை இந்த சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். எனவே வீடுகளுக்கு வரும் கேஸ் சிலிண்டர்களை இல்லத்தரசிகள் கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதேபோன்று கேஸ் நிறுவனங்களும் சிலிண்டரின் தரம் குறித்து அறிந்த பிறகே அதனை சப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×