search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலர்களின் சரணாலயமாக மாறிய வடமதுரை போலீஸ் நிலையம்
    X

    போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பிரவீன்குமார்-பிரபா

    காதலர்களின் சரணாலயமாக மாறிய வடமதுரை போலீஸ் நிலையம்

    • வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புதுமண காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெட்டியபட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20). இவர் வடமதுரை அருகே வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண பிரபா(19) என்ற பெண்ணை வட மதுரையில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பிரபா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்க மாப்பிள்ளையும் பார்த்தனர். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

    தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர் பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தங்களை தேடிவருவதை அறிந்ததும் காதல் தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரபாவின் தாய் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கதறி அழுதார். ஆனால் தான் காதலனுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக தாயின் வார்த்தையை கேட்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் தனது மகளுக்கு சாபம் விடுத்து அவரது தாய் அங்கிருந்து கண்ணீருடன் சென்றுவிட்டார். இச்சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதுமே காதலர்களுக்கு அடைக்கலம் தரும் சரணாலயமாகவே இருந்து வருகிறது. கடந்த 21 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட காதல் தம்பதி இங்கு அடைக்கலம் வந்துள்ளனர். அவர்களை போலீசார் சமரசமாக பேசி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

    வடமதுரை சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி இங்குவந்து தங்கள் பிரச்சினையை தீர்த்துச்செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×