search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சி
    X

    விலை இல்லாததால் முடுவார்பட்டி கமிஷன் கடைகளில் தேக்கம் அடைந்துள்ள கொய்யா பழங்கள்.

    கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சி

    • உற்பத்தி அதிகரிப்பால் கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா ரூ.7 மட்டுமே விலைபோகிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முடுவார்பட்டி, சரந்தாங்கி, சேந்தமங்கலம், தெத்தூர், புதுப்பட்டி, அழகாபுரி, உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1500 ஏக்கருக்கு மேல் கொய்யா, மா, பப்பாளி உள்ளிட்ட பழ வகை மரங்கள் உள்ளன.

    சில ஆண்டுகளாக இந்த பகுதியில் அதிக அளவில் கொய்யா பயிரிடப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கொய்யா பழங்கள் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குவதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த பழங்கள் மதுரை, நத்தம், திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் முடுவார்பட்டி பழ கமிஷன் கடைகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் தற்போது கொய்யா பழம் அதிக அளவில் விளைந்துள்ளது.

    இதன் காரணமாக கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சரந்தாங்கி முத்தையன், கொய்யா முருகன் ஆகியோர் கூறியதாவது:-

    சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பழ சந்தைக்கு கொய்யாப் பழங்கள் அதிகளவில் வருகிறது. இதனால் கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா ரூ.7 மட்டுமே விலைபோகிறது. 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூபாய் ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கொய்யாப்பழத்தின் உற்பத்தி அதிகமானதால் அதனை சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடை வதால் குறைந்த விலைக்கு மொத்தமாக சரக்கு வாகனங்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஜூஸ் தயாரிக்கவும், மிட்டாய் தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு விளைச்சல் குறைவு விலை அதிகம். இந்தாண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது ஆனால் விலை மிக குறைவு.

    இதனால் தோட்ட வேலை செய்யும் ஆட்களுக்கும், பழங்களை மரத்திலிருந்து பறிக்கும் கூலி ஆட்களுக்கும் சம்பளம் வழங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே கொய்யாப்பழங்கள் மரத்தில் இருந்து பறிக்காமல் மரத்திலேயே அழுகி விடுகின்றன. பழங்களை பறித்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் மாடுகளுக்கு உணவாக கொடுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 ஆண்டுகளில் இந்த பகுதியில் மட்டும் புதிதாக 1.50 லட்சம் கொய்யா மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நத்தம், மேலூர், வாடிப்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து முடுவார்பட்டி பழ சந்தைக்கு தினந்தோறும் அதிகளவில் பழங்கள் வருவதால் இந்த பகுதியில் பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×