search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
    X

    மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

    • மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கொரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, இயல்பு நிலைமைக்கு மக்கள் இன்னும் மாறவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. தற்போது தி.மு.க. அரசு ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ.1.25 வரைஉயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

    சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் 2018-ம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது, தற்போது அந்த கட்டணம் ரூ. 54 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது 625 சதவீதமாக உள்ளது. அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால் முதல் 100 யூனிட்டுக்கும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த புதிய மின் கட்டண உயர்வின் படி 2 மாதங்கள் சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,130 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் ரூ.1,725 கட்டணம் செலுத்த வேண்டும். இது 52.60சதவீதம் அதிகமாகும், மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்களிடம் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு நடந்தது. மதுரை, கோவை, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஒரு நபர் கூட மின் கட்டண உயர்வை ஆதரித்து பேசவில்லை.எத்தனை மாவட்டங்களில் நடந்தாலும் யாரும் மின் கட்டண உயர்வை ஆதரித்து பேச மாட்டார்கள். முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் கள நிலவரங்களை உள்வாங்கி கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×