search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகள் இன்று திறப்பு: வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
    X

    மதுரை பசுமலையில் உள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் திலகமிட்டு இனிப்பு வழங்கி வரவேற்றார். அருகில் கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் உள்ளனர்.

    பள்ளிகள் இன்று திறப்பு: வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

    • மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜூன் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை இன்றும் (12-ந்தேதி)பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என மொத்தம் 2,168 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை 2023-24-ம் கல்வி ஆண்டான புதிய கல்வி ஆண்டில் வரவேற்கும் வகையில் பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை மலர்தூவியும், நெற்றியில் திலகமிட்டும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளையும் ஆசிரிரியர்கள் வழங்கினர். இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ- மாணவிகளும் புன்னகை மலர்ந்த முகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து முதல் நாள் பாடங்களை படிக்கத் தொடங்கினர்.



    மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

    பள்ளிகள் திறந்த இன்றே அனைத்து அரசு பள்ளிகள்,மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி பள்ளி களிலும் இன்று பாட புத்தகங்கள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

    மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் அனைத்து பள்ளி களிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர்.

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மதுரையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் அதிகளவில் சாலைகளில் சென்றன. இரு சக்கர வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் அனைத்து வரப்பட்டதால் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கடிகள் ஏற்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×