என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மதுரை
- திமுக அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
- திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார்.
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.
ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.
ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
- காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
மதுரை:
நவநாகரீக வாழ்வில் டிஜிட்டல் மயம் தவிர்க்க முடியாததாகி விட்டது. கடிதங்களில் தொடங்கிய தகவல் தொடர்பு இன்று கையடக்கத்திற்கு வந்து விட்டது. செல்போன் இல்லாத கரங்களே இல்லை, அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பது போல் எங்கு பார்த்தாலும், எந்த நேரமும் ஒவ்வொருவரும் கைகளில் ஏந்தி நிற்கும் செல்போன்களால் குற்றங்களும் கணக்கில் அடங்காமல் போய்விட்டது.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக எத்தனையோ விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், துளியும் பிரயோஜனமில்லை என்பதற்கு சான்றாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே சாட்சி. அதிலும் பருவம் தவறும் மாற்றங்களால் பாலியல் உள்ளிட்ட பிரச்சனைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஒன்றாகவே இருக்கிறது.
அதிலும் திசைமாறிச் செல்லும் இளைஞர்களின் காதல் காவியம் பலரை பாதிப்படைய செய்துள்ளது. கண்டதும் காதல், ஈர்க்கும் வசீகரத்தால் இளம்பெண்களை தன்பால் இழுக்கும் மாய வித்தைகளை கற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நாட்களை காலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதில் காலத்தின் கட்டாயத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் தங்களையும், குடும்பத்தையும் இழந்து பின்னர் நிற்கதியாக நிற்கும் சம்பவங்களை படித்தும், பார்த்தும், அறிந்தும் மாற்றம் மட்டும் வரவேயில்லை. பாலியல் கவர்ச்சி என்பது கொடூர கொலையில் முடிந்த சம்பவங்கள் ஏராளமாக அரங்கேறியுள்ளன.
சென்னை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த மாணவி சத்யா (20), பரங்கி மலை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் தள்ளிக் கொல்லப்பட்டது தமிழகத்தையே உறைய வைத்தது. தன்னைக் காதலிக்க மறுத்த சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் (23) என்ற போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர் முதலில் காதலிக்க வற்புறுத்தி, பின்னர் சரமாரியாக தாக்கியும் உடன்படாததால் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கொலை செய்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி தன்னைக் காதலிக்க மறுத்த சாப்ட்வேர் என்ஜினீயராக சுவாதியை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து அவரை, ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்பவர் வெட்டிக்கொன்றார். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் தன்னை காதலிக்க மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தை அடுத்த வ.பாளையத்தில் சிறுமி நவீனாவை, செந்தில் என்ற வாலிபர் தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.
விருத்தாசலம் அருகே கறிவேப்பிலைக்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி தன்னை காதலிக்க மறுத்ததால் கடந்த 2019-ம் ஆண்டு ஆகாஷ் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். 2021-ல் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சுவேதாவை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வைத்து ராமசந்திரன் என்ற வாலிபர் குத்திக்கொலை செய்தார். 2022-ல் காதலிக்க மறுத்த உறவுக்கார பெண்ணும், கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவை, புதுச்சேரி சந்நியாசிக்குப்பத்தில் முகேஷ் என்ற வாலிபர் வெட்டிக் கொன்றார்.
கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி சோனாலியை அவரது வகுப்பறையில் வைத்து, அதே கல்லூரியில் பயின்ற மாணவர் உதயகுமார் என்பவர் மரக்கட்டையால் அடித்தே கொலை செய்தார். இதற்கு காரணமும் தன்னை காதலிக்க மறுத்ததுதான்.
சற்றே இதுபோன்ற விரும்பத்ததாக சம்பவங்கள் நினைவில் இருந்து மறைந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டிணம் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணியை, அவரை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சக்கரா நகரில், தனியார் ஒருவர் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர் வேலைபார்த்து வந்தார். குடும்ப வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட லாவண்யா கடந்த நான்கு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் லாவண்யா வேலைக்கு வரும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும்போது மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (வயது 25 ) என்பவர் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல சமயங்களில் லாவண்யாவை வழிமறித்து தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அதனை தட்டிக் கழித்த லாவண்யா தனது குடும்ப நிலை குறித்து பக்குவமாக எடுத்துக்கூறியும் அதனை துச்சமாக நினைத்த சித்திக்ராஜா எனக்கு நீதான்... என்ற வசனங்களும் பேசி மயக்க முயன்றுள்ளார். எப்பேற்பட்ட நிலையிலும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று லாவண்யா தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று லாவண்யா வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேரில் சென்று லாவண்யாவிடம் நீண்ட நேரமாக பேச்சுக் கொடுத்தவாறு இருந்தார். ஆனால் அவர் மசியாததால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, சேரில் அமர்ந்திருந்த லாவண்யாவை கைகளால் காட்டுமிராட்டித்தனமாக தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த லாவண்யா இருக்கையில் இருந்து பின்புறமாக கீழே விழுந்தார். அப்போது குனிந்தவாறு சித்திக்ராஜா தாக்கினார். லாவண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சித்திக் ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த லாவண்யா மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் அந்த ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. பாலியல் கவர்ச்சியால் ஏற்படும் காதல், விரைவிலேயே கசந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் எதிர்பார்ப்பு.
- விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
- அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர்.
மதுரை:
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதின் வெள்ளிவிழா, வருகிற ஜனவரி 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை புறப்பட்டார். அந்த விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்.
- மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை முயற்சியை மேற்கொள்வோம் என சின்ன உடைப்பு மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சட்ட விதிகளை பின்பற்றி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என நீதிபதி மாலா உத்தரவிட்டுள்ளார்.
மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை கையகப்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சின்ன உடைப்பு கிராம போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
- அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
- எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.
அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.
- தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ் மொழியின் சிறப்பு மிக்க எழுத்தாக சிறப்பு ழகரம் உள்ளது.
அரசு தொடர்பான அரசாணைகளில் ஸ்டேட் கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இது 'டமில் நடு' என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே சிறப்பு ழகரம் இடம்பெறும் வகையில் ஆங்கிலத்தில் 'எல்' என்பதற்கு பதிலாக 'இசட்' என திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்தேன்.
நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
ஆகவே அரசின் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்ற எழுத்திற்கு பதிலாக 'இசட்' என்ற எழுத்தை திருத்தம் செய்து பயன்படுத்தவும், மேலும் சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை கொண்டு தமிழ்நாட்டிற்கென கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்பதை 'இசட்' என திருத்தம் செய்ய ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
எனவே இந்த விவாகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுங்கள் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
- இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை:
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் கோவில் முழுவதும் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோவில் சன்னதி முதல் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்து கிடக்கின்றது. வரக்கூடிய தெரு நாய்கள் கோவிலுக்குள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிபடி அதை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதுடன், சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க அமைகின்றது.
மேலும் சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் மது அருந்தி குடித்துவிட்டு கோவிலுக்குள் உள்ளே வந்து படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலின் ஆகம விதிகள் மீறப்படுகிறது. எனவே கோவில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும் கோவிலில் புனித காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கோவிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர், கோவில் இணை ஆணையர், திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் இணைத்து இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது.
- இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் பகுதியில் தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம்.
குளங்கள், நீர்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மை யமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது.
இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.
மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு.
கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய பா.ஜ.க. அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. மத்திய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்.
- நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
- நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை:
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு பிரச்சனை மதுரை சின்ன உடைப்பு ஊரில் உள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக இப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.
இதையறிந்து பொதுமக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோர் பேசினர். அப்போது வீடுகளை காலி செய்ய வருகிற சனிக்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அதிகாரிகள் வரும் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தது. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
- மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை.
- விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளது.
மதுரை:
மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் பங்கேற்று பேசியதாவது:-
சமூக நீதி சமூக நீதி என சொல்லும் தி.மு.க. சிறுபான்மையினருக்கு என்ன செய்துள்ளது. தனுஷ் நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில் செல்கிறது அதுவா நாட்டிற்கு முக்கியம். நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன, திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன. தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன.
இது தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது.
எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. படித்த திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் மதுரையில் இருந்தார். அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டதால் மதுரை மக்கள் தி.மு.க. ஆட்சியில் திண்டாடி வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. அறிவித்த ஆயிரம் ரூபாய் எல்லா பெண்களுக்கும் போய் சேர்வது கிடையாது.
பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்றால் அது தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என மக்கள் பயன்பெறும் திட்டத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி விட்டனர். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை.
சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். தற்போது காலை உணவு திட்டத்தில் எந்த ஒரு தரமும் இல்லை. பொங்கல் பரிசு எடப்பாடி ஆட்சியில் வாரி வாரி கொடுத்தார். கடந்த பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த அரிசி பொங்கல் தொகுப்பில் புழுக்கள் இருந்தன. விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளது. மக்களுக்கான திட்டங்களில் செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார். 2026-ம் ஆண்டு தி.மு.க.வை மக்கள் நிச்சயமாக வீட்டிற்கு விரட்டி அடிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்