search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
    • அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும்.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அ.தி.மு. க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பார்கள் என மக்கள் நம்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

    ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

    அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தெரிகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

    அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ்.சை வஞ்சிக்கிறது. அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என சொல்கிறார். தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம் நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவது இல்லை. துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
    • தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

    திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது
    • எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கட்சி, பாமக , தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தலை சந்திக்கிறது.

    மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணிய சாமி, "பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கண்டு பதில் சொல்கிறேன்.

    இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது" என்று அவர் தெரிவித்தார். 

    • விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
    • மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்

    பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

    மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    • நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி.
    • 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 22-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    இதனையடுத்து 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. காலையில் வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனத் திற்கு மலையேறி சென்றனர். இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    • மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
    • சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூடல்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 வயதாக இருக்கும் போது உடல்நலக்குறைவால் தாய் இறக்கவே, தந்தை வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி பலியானார்.

    பெற்றோர், உடன் பிறந்தவர் என உறவுகளை இழந்த சிறுமிக்கு அவரது பெரியம்மா கைகொடுத்தார். அவர் தனது தங்கை மகளை தன்னுடைய மகளாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். பெற்றோர் இல்லாத குறை சற்றும் தெரியாத அளவுக்கு அவர் மீது அன்பும், பாசமும் காட்டினார்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சிறுமி, குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா பலமுறை கதவை தட்டியும் குளியல் அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். பதறியடித்துக்கொண்டு அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெரியம்மா தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து கிடந்த வீட்டின் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கிழிந்த நிலையில் சிறுமியின் ஆடைகள் கிடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
    • சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மண்டையன் மகன் பாக்கியம் என்பவரிடம் நடைபெற்ற சோதனையில் அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பொருட்களை அதிநவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    அதனையடுத்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 320 ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் பாக்கியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
    • திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை:

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.

    * மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.

    * பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    * தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்... மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.

    * திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கை... இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.

    * பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?

    * சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
    • சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. அப்போது மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார். இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்கின்ற வகையிலும், வாக்குக்காக பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூக்கு கயிறுடன் போலியான ரூபாய் நோட்டுகளை இணைத்து மனுதாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

    • இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
    • தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    மதுரை:

    இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.

    இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

    நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

    இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

    இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    ×