search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் 9.8 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியுள்ளது.
    • மழை நீர் வடியாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் அளவிற்கு பேய் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மழை வெள்ளம் குறித்து பி. மூர்த்தி கூறுகையில் "ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. செல்லூரை பொறுத்தவரையில் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் வரும் காரணத்தினால் செல்லூரில் இருந்து வைகையில் தண்ணீர் நேரடியாக செல்வதற்கான வேலை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

    அதற்காக மூன்று டிரான்ஸ்பார்மர்கள் மாற்ற வேண்டிய நிலை உள்ளது. மின்சாரத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக சொல்லி அந்த வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநகராட்சி, ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைகள் துரித நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் அனைத்து பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

    வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்குள் மொத்தமும் சரி செய்யப்படும். முதலமைச்சர் சொல்வதற்கு முன்பாகவே பணிகளை துவங்கிவிட்டோம்" என்றார்.

    • மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
    • 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

    நகர் பகுதியில் காலை முதல் மதியம் 2 மணி வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டமாக மாறி சாரல் மழையாக பெய்த வண்ணமாக இருந்தது.

    உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை முதல் மாலை வரை 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர்  கொட்டித்தீர்த்துள்ளது. 

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புகுந்த மழைநீரின் நடுவே கட்டிலில் படுத்திருக்கும் மூதாட்டிகள்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

    உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாலாந்தூர், வி.பெருமாள்பட்டி, பண்ணப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வி.பெருமாள் பட்டி, பண்ணப்பட்டி, கொங்கபட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக்குழுவினரிடம் வழங்கி வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

    வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜ்சத்யன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ், சோழவந்தான் கருப்பையா, திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர்.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே இங்கு கந்தசஷ்டியின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ரூ.1,000, ரூ.2,000 என வசூலித்தால், ஏழை பக்தர்கள் நிலை என்ன ஆகும்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கோவில்கள் இருக்கிறதா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.

    பின்னர் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
    • சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.

    மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.

    • மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
    • தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.

    அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.


    குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
    • உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை 3 நாட்களுக்கு அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.

    மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
    • என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் அதிக வருமானம் வரும் என்றும், எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.

    தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார். நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பல முறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றேன்.

    அப்போது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார் என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டுத்தர வேண்டுமென புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார். 

    • ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்.
    • திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை.

    மதுரை:

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்; கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்த பின்பும் மத்திய அரசு இன்னும் புதிய கவர்னரை நியமிக்கவில்லை; மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை மத்திய அரசு கவர்னராக நியமிக்க வேண்டும். சிபிஎம்ஐ பொறுத்தவரை கவர்னர் பதவி தேவை இல்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை. அதிமுக பாஜக கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை, கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன.
    • நித்தியானந்தாவின் சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா?

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேகா என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருக்கிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக சுரேகா, தர்மலிங்கம் மற்றும் ரவி ஆகியோர் மீது தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஆனால் நாங்கள் அது சம்பந்தமான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.பொய்யான புகாரில் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது மனுதாரர் நிலத்தை அபகரிக்கும் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு, ஆகவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

    புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நிலத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர் கணேசனை பயமுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தலைமறைவாய் இருக்கும் நித்தியானந்தா இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார். நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன. நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் மனுதாரர் இனிமேல் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன்ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

    • குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
    • ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம்.

    நான்கு பல்கலைக்கழங்கள் மீது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    ஆவணம் தர தாமதித்தால் பல்கலைக்கழங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    குரூப் 1 தேர்வில் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விவரம் அளிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.

    பல்கலைக்கழங்கள் ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ×