search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தை நடமாடுவதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையை தெரு நாய்கள் விரட்டி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அப்பகுதியின் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதும் தெரியவந்தது. இதனை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை யாராவது கண்டால் 93608 89724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த சிறுத்தை திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக வந்திருக்கலாம் என்றும், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வரும் போது வழி தவறி நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றனர்.

    வனப்பகுதி எதுவும் அருகில் இல்லாத நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மயிலாடுதுறை நகரின் மையமான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை உலாவும் சம்பவம் அப்பகுதி மக்கள் மனதில் அச்சத்தையும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவின் (வயது 17). இவர் கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவிலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவ மீனவர்கள் ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24).

    இந்த நிலையில் கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு சின்னங்குடியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். பின்னர் இரவில் அங்கேயே தங்கினர்.

    இன்று காலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாசல் நோக்கி புறப்பட்டனர். அப்போது ராதாநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் உடைந்த நிலையில் மாணவர் கவின், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளிதாஸ் பலத்த காயமடைந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கவின், ஜஸ்வந்த் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காகவும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    திருக்கடையூர்:

    திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேஷ் நேற்று இரவு தனது தம்பி ராஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.

    அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நத்தம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்தில் இறந்த ராஜேஷ்சுக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட பூம்புகார் இடம்பெற்றுள்ள மாவட்டம்.
    • மயிலாடுதுறையில் ரூ.30 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு ரூ. 656 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதன்பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:-

    * டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி.

    * மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.

    * ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கும் மாவட்டம்.

    * முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட பூம்புகார் இடம்பெற்றுள்ள மாவட்டம்.

    * தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமமிர்தம் அம்மையார் பிறந்த மண் மயிலாடுதுறை.

    * மாவட்டத்தை அறிவிப்பதை விட, உள் கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கியம்.

    * அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றுவதோடு, அதை அமல்படுத்துவதை கண்காணிக்கும் அரசு.

    * தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற பட்டாக்களை கணினி மூலம் வழங்குவது இதுவே முதல் முறை.

    * மயிலாடுதுறைக்கு ரூ.10 கோடியில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.

    * விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ.44 கோடியில் திட்டம்.

    * ரூ.2.40 கோடி செலவில் புதிய படுகையணை கட்டப்படும்.

    * மயிலாடுதுறையில் ரூ.30 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

    * 3 மாவட்ட கல்லூரிகளுக்கு 1,642 கணினிகள் வழங்கப்படும்.

    * மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடியில் புதிய நூலகம் கட்டப்படும்.

    * எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    * 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    * நான் முதல்வன் திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாடு பயிற்சி பெற்றுள்ளனர்.

    * மழையால் பாதிக்கப்பட்ட 1 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு ரூ.966 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    * மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    * மார்ச் 6-ம் தேதி "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டம் சென்னையில் தொடங்கப்படுகிறது. "நீங்கள் நலமா" திட்டம் மூலம் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்படும்.

    * முதல்வர், அமைச்சர், துறை செயலாளர்கள், அதிகாரிகள் மக்களை தொடர்புகொண்டு கோரிக்கைகளை கேட்பார்கள்.

    * மக்களின் குறைகளை கேட்டு நிதி நெருக்கடியிலும், திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    * தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழகம் வர தொடங்கியுள்ளார்.

    * தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள்.

    * தமிழக மழை, வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    * திராவிட மாடல் அரசு பக்கம் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 04) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர். மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு அங்கேயே தங்குகிறார்.

    நாளை காலை அங்கிருந்து மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாளை பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
    • நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.

    "எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.

    இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன்.
    • எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
    • பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைத்தளங்கள், டி.வி சேனல்களில் வெளியிடாமல் இருக்க நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். ஏன் பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்க ஆசைப்படுகிறீர்கள் என தட்டிக் கேட்டபோது, என் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, திருவெண்காடு பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தூண்டுதலாக உள்ளனர்.

    எனவே பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வினோத் ( வயது 32), குடியரசு (39 ) , விக்னேஷ் (33), நெய் குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ( 28 ) ஆகிய 4 கைது செய்தனர். பின்னர் அவர்களை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அகோரம், அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நீர்மூழ்கிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் சென்னையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் சீர்காழிக்கு வந்தனர். பின்னர் சீர்காழி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்தனர். அப்போது அந்த சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் நேற்று தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (வயது 36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அவர்கள் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழிக்கு வந்த ருச்சென்- யோங்சென் ஜோடிக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

    முன்னதாக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதேபோல மணமகன் யோங்சென்னும் பட்டு வேட்டி, மாலை அணிந்து மணமேடைக்கு வந்தார். மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    அப்போது அவர்களை சூழ்ந்து நின்ற நண்பா்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினா். பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நண்பர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    ×