search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் ஆய்வு
    X

    மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் ஆய்வு

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாலைக்கார தெருவில் உள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதில் தற்சமயம் ஒரு எந்திரம் பழுதாகி உள்ளதால் 11 எந்திரங்கள் மூலம் இன்று சுத்திகரிப்பு நடந்து கொண்டு உள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு சுத்திகரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டதாகும்.

    அதில் 13 எம் .எல். டி கழிவு நீரை நாள்தோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

    இதிலிருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் அனைத்தும் தற்சமயம் வடவாற்றில் விடப்படுகிறது.

    தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பயிரிடப்படுகிறது.

    அந்த விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்த கோரிக்கை குறித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக அனுமதி கிடைத்த பின்னர் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    தற்சமயம் செய்யப்படும் ஆய்வு எதற்காக என்றால் மாநகராட்சி கூட்டங்களில் அடிக்கடி இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகக்குழு தலைவர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×