search icon
என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    கடல் வளத்தை அழிக்கும் இழுவை மடியை தடை செய்ய வேண்டும். மீன்பிடி சட்டம் 1983 பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை தாலுகாவை சேர்ந்த 19 கிராம பைபர் படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மீனவர்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் ரேசன், ஆதார் கார்டுகளை ஒப்படைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

    • விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
    • மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலையை பயன்படுத்தி ஒரு சில விசைபடகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலையை பயன்படுத்துவதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து இழுவை மடிவலையை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
    • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

    அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

    இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

    அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.
    • கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட திருமேனி செட்டி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது நண்பருடன் புத்தூரில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது பைகரா வளைவில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.

    இதில் கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டும், நேற்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கடலில் மாயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
    • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

    இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கஞ்சா பொட்டலங்கள் குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகில் இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. அவ்வழியாக வந்த மீனவர்கள் அந்த பொட்டலங்கள் என்னவென்று தெரியாமல் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.

    உடனடியாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 13 பொட்டலங்களிலும் தலா 2 கிலோ வீதம் 26 கிலோ கஞ்சா இருந்ததும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்தது.

    இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
    • 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை:

    தமிழக மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மீனவர்கள் சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள், நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

    தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×