search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    76-வது சுதந்திர தின விழா நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

    • நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    நாமக்கல்:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.

    மேலும் சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் உமா கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 16 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

    விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500 வீதம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ மூலம் 1 பயணியர் வாகனம், 2 டிராக்டர், 14 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆணை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.2.36 மதிப்பிட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு சேமிப்பு கடன், 1 பயிர்கடன் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு நிழல்வலை குடில், 1 பயனாளிக்கு நுண்ணீர்பாசனம் என மொத்தம் ரூ.2.55 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 18.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை த்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,260 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,580 வீதம் ரூ.11.160 மதிப்பில் இலவச தையல் எந்திரம், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.2.11 கோடி மதிப்பில் 3 வங்கி பெருங்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை என ஆக மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அலுவலர்கள், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    கண்கவர் கலைநிகழ்ச்சி

    விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ராசிபுரம் ஆர்.சி தூய இருதய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன் (நாமக்கல்), கௌசல்யா (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், துறைச்சார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×