search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட்டை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    • அந்தந்த மாநிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வா்க்கி, யூகலிப்டஸ் தைலம் ஆகியவை பிரபலம் மிகுந்தவை. அதேபோல ஊட்டியில் தயாராகும் ஹோம் மேட் சாக்லேட் உலகஅளவில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட்டை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் நீலகிரியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்டுகள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் சாக்லெட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் தேசிய சாக்லேட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 28 மாநிலங்களில் விளையும் பொருட்களைக் கொண்டு விதம்-விதமாக ஹோம் மேட் சாக்லெட் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

    நீலகிரி போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் தயாராகும் இந்த வகை சாக்லெட்டுகள், சீசன் அல்லாத நேரங்களில் மாதந்தோறும் ஒரு லட்சம் கிலோ என்ற அளவில் விற்பனையாகும். அதுவே சீசன் கால த்தில் 5 லட்சம் கிலோ வரை விற்பனை களைகட்டும்.

    தேசிய சாக்லெட் திருவிழாவில் கால் கிலோ சாக்லெட் ரூ.120 முதல் ரூ. 400 வரையும், பிரத்யேகமாக தயாராகும் சாக்லெட்டுகள், ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பளை செய்யப்பட்டு வருகின்றன.இதுகுறித்து ஹோம் மேட் சாக்லெட் தயாரித்து வரும் ஊட்டியை சோ்ந்த பஸ்ருல் ரஹ்மான் என்பவர் கூறியதாவது:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அந்தந்த மாநிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும், பெண்கள் கழுத்தில் அணியும் டாலா், கம்மல் வடிவ ங்களில் சாக்லெட் இடம் பெற்றிருப்பது புத்தாண்டுக்கு புது வரவாக உள்ளது.

    நீலகிரியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோம் மேட் சாக்லேட்டுகளில் ஒவ்வோா் ஆண் டும் புதுமைகளை புகுத்தி வருகிறோம். இதனால் சாக்லெட்டுகளுக்கான கிராக்கி இன்னும் குறையாமல் உள்ளது. மேலும் இங்கு தயாராகும் சாக்லெட்டுகளில் சுவையும், தரமும் மாறாமல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
    • 50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும்.

    மிச்சாங் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

    மழை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன் உறைபனியும் கொட்டுகிறது.

    50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல் தரைகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது.

    இதுதவிர கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டி யிருந்தது.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 7.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில் இன்று 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    கொட்டும் உறைபனி காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தேயிலை செடிகள் மட்டுமின்றி புல் வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
    • உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

    இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

    மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது.
    • ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது.

    அருவங்காடு:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு ஸ்டார்களை தொங்க விடுவது, குடில்களும் வைத்துள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் தான். கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் தங்களது நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வாங்கி கொடுப்பது வழக்கம்.

    இதனை அடுத்து அனைத்து பேக்கரிகளிலும் கேக் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.

    அங்குள்ள தேவாலயங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. அங்கு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீடுகள் மற்றும் கடைகளிலும் ஸ்டார்கள் தொங்கவிட்டு, குடில்களும் அமைத்துள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ள பேக்கரிகளில் கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இந்த கேக்குகளிலும் மக்களை கவரும் வகையில், பல்வேறு வகையில் கேக்குகளை தயாரித்து வருகின்றன.

    அந்த வகையில், சதுரம், வட்டம் மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தாத்தா, மயில், ரோஜா மலர் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடிலை போன்றும் கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதனை கடைக்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்களுக்கு பிடித்தமான கேக்குகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு 1 கிலோ கேக் ரூ.600க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு சுற்றுலா வந்துள்ள மக்களும் தங்களுக்கு பிடித்தமான கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

    இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    • யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் 10 யானைகள் மலை சரிவிலிருந்து சாலையை கடக்க முயற்சித்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை கண்காணித்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

    1 மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    இது தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    மலைப்பாதையில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றிற்கு தொல்லை கொடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதனையும் மீறி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏ. என். ஆர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனை பார்த்த வனத்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

    சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என விரும்புவார்கள்.

    காடுகளுக்கு நடுவே மலைரெயில் செல்வதாலும், இயற்கை காட்சிகளை கண்டு கழிக்கலாம் என்பதாலும் மலைரெயில் பயணத்தை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுவது, மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

    மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ரெயில் முன்பு, உள்ளேயும் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் செல்லும் வழியில் காடுகளின் இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
    • குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் வெற்றி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி.

    அதே பகுதியில் 10 வயதான பள்ளி மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே இடத்தில் வசிப்பவர்கள் என்பதால் ரவிச்சந்திரனும், சிறுமியின் பெற்றோரும் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது மாணவிக்கு ரவிச்சந்திரன் இனிப்புகளும் வாங்கி கொடுத்தார்.

    சமீபகாலமாக ரவிச்சந்திரன், இனிப்பு வாங்கி கொடுத்து தனது வீட்டுக்கே சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அத்துமீறி அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    பல நாட்களாக இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விசாரித்துள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தனக்கு செய்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதைக் கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர். தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

    அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா, 18 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் கரடி, வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணை உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.

    தொடர்ந்து இதுபோன்று கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, தேவாலா வனசரகர் சஞ்சிவி, பிதர்காடு வனசரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ள அத்திகுன்னா, அத்திமாநகர், புவலம்புழா உள்பட 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட கரடியின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் கரடியை விடுவித்தனர்.

    கடந்த 2 மாதங்களாக அத்திகுன்னா, நெல்லியாளம் டேன்டீ, பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
    • பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.

    இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.

    மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.

    இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    • அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.

    குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

    அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    ×