என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீலகிரி
- உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
- மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.
இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.
மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.
மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.
முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது.
- நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.
கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் உதகை- மேட்டுப்பாளையம் மலை ரெயில் நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வகையில் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இந்த மலை ரெயில் அதிக அளவில் விரும்பி பயணம் மேற்கொள்வார்கள்.
- கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன.
- மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நீலகிரி முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மாஸ்டர் மாதன் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு மாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் திருப்பூரில் வருகிற 11-ந்தேதி மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க உள்ளோம். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும். ஆனால் விவசாயிகளுக்காக ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கும் நிதிகள் முறையாக மக்களை சென்றடையவில்லை. அரசு அதிகாரிகளே போலி கணக்குகள் மூலம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பணத்தை மீண்டும் திரும்ப பெறும் வகையில் மத்தியஅரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது என்பதற்கு உதாரணம் காவல்நிலையம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சுதான். சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடிகர் கவுண்டமணி சொல்வதுபோல அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கூறுவது போல சட்டத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன. 1991-ம்ஆண்டுமுதல் 34 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் பொறுப்பில் உள்ளேன். ஆனால் நான் இதுவரை கூட்டணி குறித்து பதில் சொன்னது இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வதும், யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்ற அதிகாரமும் பா.ஜ.க.வின் மேலிட தலைவர்களுக்கு தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
- சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரசபையில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 22 பேரும், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-6, சுயேச்சை-1 என கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகரசபை தலைவராக 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக ஷீலா கேத்தரின் பதவிவகித்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து நகரசபை தலைவர் பதவியை நிரப்புவதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நகரசபை தலைவர் பதவிக்கு 16-வது வார்டு கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சுசீலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டார். இன்று காலை நகரசபை தலைவர் தேர்தல் ஆணையாளர் சசிகலா தலைமையில் நடந்தது. தலைவர் தேர்தலில் போட்டியிட சுசீலா வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுசீலா, நகரசபை தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுசீலாவிடம் ஆணையாளர் வழங்கினார். நகரசபை தலைவர் சுசீலாவின் கணவர் முருகேசன், குன்னூர் நகர தி.மு.க. துணை செயலாளராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
- பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறை பயன்படுத்த உள்ள பேரிடர் மீட்புக்கருவிகள் மற்றும் உபகரணங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு தயார்நிலையில் உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 500 பேர் அடங்கிய 42 குழுவினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு போல நீலகிரி மாவட்டத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் பொதுமக்கள் அருகிலுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ளலாம். மேலும் பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுவட்டம் பேரூ ராட்சியில் மிகவும் அபாயகரமான இந்திரா நகர் மற்றும் டி.ஆர்.பஜார் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர், நடுவட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்பு களையும் ஆய்வு செய்தார்.
- ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.
- மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணைய தளத்தில் தகவல் பரவிய நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
- கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவர்கள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தவளை மலைஅருகே, மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இதனால், ஊட்டி-கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வனப்பகுதி என்பதால், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. சூறாவளி காற்றுக்கு குன்னூரில் உள்ள டிம்பர் டாப்ஸ் செல்லும் நடைபாதையில் மரங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
இதனால் அந்த வழியாக செல்வதற்கு மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகரட்டி, மேலும், குன்னக்கம்பை, கோட்டக்கல் பகுதிகளில் மரங்களும், கேத்தி, மணியபுரம் பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததாலும், விடிய, விடிய கனமழை பெய்ததாலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றன.
தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அருவங்காடு:
குன்னூர் பகுதியில் கிராமப்புறம் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டாலும், அவை எளிதில் தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக்கரடி குன்னூர் ஆர்செடின் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சின்னப்பன் என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது.
தொடர்ந்து சமையலறையில் இருந்த உணவுகளை தின்று ருசிபார்த்தது. பின்னர் அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது.
இதற்கிடையே வீட்டில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சின்னப்பன் உடனடியாக சமையலறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு கரடி நின்றுகொண்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அண்டை வீட்டாரிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டுக்குள் நின்ற கரடியை தீப்பந்தங்கள் காட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்கு விரட்டியடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுங்குளிர் நிவுகிறது.
- சுற்றுலா தொழிலை நம்பி இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு அவர் வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுங்குளிர் நிவுகிறது. மேலும் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அங்குள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பி இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டியில் கடந்த 3 நாட்களாக மழை சற்று ஓய்ந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர்மழையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அங்கு தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்படுகிறது.
நீலகிரி மலைப்பாதையில் மேக மூட்டம் படிந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் தற்போது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மேலும் மலைபாதையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளிடம் சுற்றுலா வாகனங்கள் கவனத்துடன் இயக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
- அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
- தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதுடன் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. இதில் குன்னூர்-ஊட்டி மலைரெயில் வழித்தடத்தில் அருவங்காடு, கேத்தி ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனால் அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
தொடர்ந்து மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், ஊட்டிக்கு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மலைரெயில் குன்னூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.
மலை ரெயில்பாதை வழித்தடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே குன்னூர்-ஊட்டி இடையே இன்று ஒரு நாள் மட்டும் மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
- எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 2 வாரமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களாக மழை குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.
ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதில், ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பாதகண்டி என்ற பகுதியில் 30 அடி உயரத்தில் இருந்து மண்சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில், குளிச்சோலை, ஜல்லிகுழி, பிங்கர்போஸ்ட், மஞ்சூர், அவலாஞ்சி, இத்தலார் பகுதிகளில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குந்தா பாலம் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து மரங்கள் மற்றும் மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
சூறாவளி காற்றுக்கு தொட்டகம்பை, மேல்குந்தா, பிக்கட்டி, எடக்காடு, ஓணிகண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், வீட்டு கூரை ஓடுகள் சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டது.
மரக்கிளைகளும் முறிந்து விழுவதாலும், ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மழை, சூறாவளி காற்றுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 18.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-182, அப்பர் பவானி-90, ஓவேலி-68, குந்தா-66, எமரால்டு-52, நடுவட்டம்-45, தேவாலா-41, கிளைன்மார்கன்-36 அப்பர் கூடலூர், பாலகொலா-35, கூடலூர்-34, பாடந்தொரை-32, செருமுள்ளி-31.
- குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலையை அடுத்து நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண கோரியும் அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது.
இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து, சீனிவாசன், வசீம் உள்பட 4 கும்கி யானைகள் இங்கு அழைத்து வரப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று, தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டாய்மட்டம், காரக்குன்னு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அந்த யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடலூா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினா், யானை விரட்டும் காவலா்கள், சிறப்புக் குழு வனக் காவலா்கள், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளா்கள் ஆகியோா் 4 கும்கி யானைகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஊருக்குள் புகுந்த யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்