search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 80 வயது ஆசிரியர்களுக்கு சீர்வரிசை
    X

    50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 80 வயது ஆசிரியர்களுக்கு சீர்வரிசை

    • சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர்.
    • பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1972-1974-ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களாகவும், வணிகர்களாகவும், விவசாயிகளாகவும், அரசுப் பணியாளராகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.

    60 வயதை கடந்த இந்த முன்னாள் மாணவர்கள் 51 பேரும், 50 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் குழு மூலம் தகவல்களை பரிமாறியதுடன், சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த சந்திப்பின்போது, தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு 60 வயதை கடந்து பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வரும் முன்னாள் மாணவர்கள் 51 பேரும் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். அப்போது பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.

    மேலும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக 80 வயதை கடந்த தங்கள் ஆசிரியர்களுக்கு வெற்றிலை-பாக்கு, பழம், பட்டுவேட்டி, பட்டு புடவையுடன் கூடிய சீர்வரிசை கொடுத்து நெகிழ்ந்தனர். தங்கள் மனைவிகளுடன் வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள், 60 வயதிலும் தங்களை மறக்காத மாணவர்களின் நன்றி உணர்வுகளை மெய்சிலிர்த்து பாராட்டினர். பின்னர் அனைவரும் ஒன்றாக நின்று குழு படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×