search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு
    X

    பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு

    • கடையில் புகுந்து பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
    • மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. பெண்ணை தாக்கிய வழக்கில் அவரையும் அவரது கணவர் மற்றும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி தலைவராக இருப்பவர் சுமத்ரா. அதே ஊராட்சியில் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த செம்மலர்(42) என்ற பெண் பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டதாகவும், அதுக்குறித்து செம்மலர் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நியாயம் கேட்டு பேசிய ஆடியோ பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுக்குறித்து சில தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் இருதரப்பினரையும் கண்டித்து அனுப்பியுள்ள னர்.

    இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 19ந்தேதி காலை சுமார் 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது தரப்பினரும்- மணலி கடைவீதியில் செம்மலர் நடத்திவரும் தையற்கடையில் புகுந்து அப்பெண்ணை தாக்கியதோடு, நடுரோட்டில் தர,தரவென இழுத்து போட்டுள்ளனர்.

    அதுக்குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மயக்கமுற்று கிடந்த செம்மலரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குணசீலன்(32) என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள சுமத்ரா மற்றும் அவரது கணவர் ரவி உட்பட 13 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில் குடிநீர், சுகாதாரம், தெரு மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு யாரை நாடுவது என்று பொதுமக்கள் குழம்பியுள்ளதோடு - மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×