search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    • குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத அளவில் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல மருதூர் ஊராட்சி மேலசேத்தி கிராமத்தில் உள்ள 27 வீடுகளுக்கு கடந்த 23 ஆண்டுகளாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொது குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்த குடிநீரானது நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சி நால்ரோடு பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் அமைப்பிலிருந்து விநியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலமருதூர் ஊராட்சி நிர்வாகம் மூலமாக குடிநீர் பைப்புகள் வீடுகள் தோறும் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் மேல சேத்தி கிராமத்தில் வசிக்கும் 27 குடியிருப்பு வாசிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மேலச்சேத்தி குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்புகளும்

    துண்டிக்கப்பட்டு விட்டதால், தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத அளவில் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×