search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    35 மாணவர்களுக்கு விலையில்லா கையடக்க கணினி
    X

    பிளஸ்-2 மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் இலவச கையடக்க கணினிகளை வழங்கினார்.

    35 மாணவர்களுக்கு விலையில்லா கையடக்க கணினி

    • மருத்துவம் மற்றும் பொறியியல் தேர்வு எழுதும் 35 மாணவர்களுக்கு கையடக்க கணினியை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • 143 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் விலையில்லா கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசியதாவது:-

    அரசுபள்ளியில் பிளஸ்-2 படித்து மருத்துவ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேவையான தேர்வுக்கான எளிய பயிற்சி முறையை போதியளவு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை பையூஸ் ஆகாஷ் நிறுவனம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் பயிற்சி வழங்கும் வகையில் மத்திய அரசு 117 முன்னேற விளையும் மாவட்டங்களை தேர்வு செய்து இத்தகைய பயிற்சிகளை வழங்குகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய முன்னேற விளையும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த நிறுவனம் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நுழைவு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் நுழைவு தேர்வுக்கு 35 மாணவ-மாணவிகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நுழைவு தேர்வை எளிதாக பயிற்சி பெற்று எழுதும் வகையில் ஒவ்வொருவருக்கும் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் இலவசமாக கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இணையதளம் வழியாக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று நுழைவு தேர்வை எளிதாக கையாள முடியும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி என்னும் இலக்கை பெற்று லட்சியத்தை அடைந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலுமுத்து, மாவட்ட பையூஸ் ஆகாஷ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், பாலமுருகன், பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×