search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மானாங்குடி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை.
    X

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மானாங்குடி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை.

    • மண்டபம் பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மானாங்குடி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் தேவையை தொய்வின்றி நிறைவேற்ற ரூ.612 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இருப்பினும் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் முறையாக பொது மக்க ளுக்கு வழங்கப்படு வதில்லை. காவிரி குடிநீர் விநியோகத்திற்காக மாத கட்டணத்தை உள்ளாட்சிகள் தற்போது வரை வசூல் செய்து வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சியில் உள்ள 18 வார்டு பொது மக்களுக்கு தினந்தோறும் 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் இந்த அளவு தண்ணீர் கடந்த ஒரு மாதமாக முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மண்டபம் பேரூராட்சி மக்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்க 9 கிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி 600-க்கும் மேற்பட்ட பொது குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. மேலும் 700-க்கும் மேற்பட்ட வீடு இணைப்பு களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலால் பேரூராட்சி கிணறுகள் வறண்டு விட்டதால் பேரூராட்சி நிர்வாகத்தால் முறையாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வறண்ட கிணறுகளை சில நாட்களுக்கு முன் தூர்வாரியது. இதையடுத்து தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தால் கிணற்றின் நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.

    இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கத்தால் மண்டபம் மக்களின் குடிநீர் ஆதாரமான கிணறுகள் முழுமையாக வறண்டு போய் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வெளியூர்களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

    எனவே மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்ய மானாங்குடி தண்ணீர் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×