search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள்
    X

    தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்.

    தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள்

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×