search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தச்சநல்லூரில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

    • கடந்த 26-ந்தேதி மாயமான தொழிலாளி நேற்று ஹவுசிங் போர்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 26-ந்தேதி மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாயாண்டி தச்சநல்லூர் அருகே சிதம்பரம் நகர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காரணம் என்ன?

    இதில் சம்பவத்தன்று மாயாண்டியுடன் கறிக்கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர் மாயாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதும், அப்போது குடிபோதை தகராறில் அவர் மாயாண்டியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை மாயாண்டியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×