search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை -சபாநாயகர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்தார்
    X

    நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை சபாநாயகர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை -சபாநாயகர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்தார்

    • உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா வர்த்தக மையம் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5,01,877 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் இன்று உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட இயக்குனர் சுரேஷ், சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கிஷன் குமார், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 840 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 5,01,877 அட்டைதாரர்கள் உள்ளனர்.இதில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 4 லட்சத்து 30 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் விநி யோகம் செய்யப்பட்டது. அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேர் நிரப்பி ஒப்படைத்தனர்.

    இதில் சுமார் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வங்கி கணக்குகளில் பணம் செலு த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவாகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் உதவித்தொகை என மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பயணம் மூலமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் குழு மூலமாக ஒரு மாதத்தில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறாக நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு மட்டும் குடும்ப செலவாக ரூ.120 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு

    விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ள இந்த திட்டமானது மக்கள் மனதில் ஒரு வருடம், 2 வருடம் அல்ல, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரும் ஒரு திட்டமாகும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் போல இந்த உரிமை தொகை திட்டத்திற்காக பெண்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு குறுந்தகவல் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    முதல்-அமைச்சர் இலவச பஸ் பயணம், ஏழை விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இந்தியாவில் வங்கி பயனாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் வைத்திருக்காத காரணத்தினால் ரூ.23 ஆயிரம் கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தவிர அதிக அளவு ஏ.டி.எம் பயன்படுத்தியதற்காகவும், குறுந்தகவல் அனுப்பும் வசதிக்காகவும் என சுமார் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இனி ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுபோன்ற அபராத தொகைகள் எடுக்கப்படாது என்ற நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினால் ஏற்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட 2,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான பண பரிவர்த்தன அட்டை களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    இதில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்ல துரை, வீரபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா மேடையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    Next Story
    ×