search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி அய்யனாரப்பன் கோவில் பூட்டு அகற்றம்
    X

    பூட்டு அகற்றப்பட்டதை தொடர்ந்து அய்யனாரப்பன் கோவிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

    எடப்பாடி அய்யனாரப்பன் கோவில் பூட்டு அகற்றம்

    • எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுகுறித்து மறு உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர்.

    கோவிலுக்கு பூட்டு

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட்டனர்.

    தர்ணா போராட்டம்

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்து முன்னணி இயக்கத்தைச் சார்ந்த மாவட்ட நிர்வாகி பழனிசாமி தலைமையிலான திரளான பக்தர்கள் சம்பந்தப்பட்ட கோவில் முன் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடன்பாடு

    அவர்கள் இரவு பகலாக ஆன்மீக பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, நேற்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்றப்பட்டது.

    இரு தரப்பினரும் வெவ்வேறு தேதிகளில் சம்பந்தப்பட்ட கோவிலில் தவ பூஜை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதன் பேரில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலின் நுழைவாயில் இருந்த பூட்டினை அகற்றினார். இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×