search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  கொட்டிய கன மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் தவிப்பு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொட்டிய கன மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் தவிப்பு

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
    • மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் திரண்டது.

    சூறைக்காற்றுடன் மழை

    மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் இரு சக்கர வகனங்களில் சென்றவர்கள் பாலங்களின் கீழ் பகுதிகளில் ஒதுங்கினர்.

    ஜங்சன், சாரதா கல்லூரி சாலை, அத்வை ஆசிரம சாலை, மெய்யனூர், இட்டேரி ரோடு, தாதாகப்பட்டி, நெத்திேமடு, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, ஜங்சன், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் தத்தளித்த படியே சென்றனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதனால் மழை நின்றதும் பல சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்றதும் பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்தினர்.

    திருவாக்கவுண்டனூர் பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கழிவு நீர் தேங்கியதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான சங்ககிரி, மேட்டூர், வீரகனூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    129.10 மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 29.4, வீரகனூர் 23, தலைவாசல் 12, தம்மம்பட்டி 9, சேலம் 8.5, கெங்கவல்லி 5, ஆத்தூர் 4.2, ஆனைமடுவு 4, ஏற்காடு 3 மி.மீ என மாவட்டம் முழுவதும் 129.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமார பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்ட மங்கலம், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், ஆனங்கூர், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பலத்த மழை

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் , பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    குளிர்ச்சி

    இந்த மழையினால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 33 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 18.2, மங்களபுரம் 5.8, கொல்லி மலை 3, ராசிபுரம் 1.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 61.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×