search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பழனியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் உள்ள இந்த கோவில் 90 வருடங்கள் பழைமையானது.

    சிவகங்கை

    சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் உள்ள 90 வருடங்கள் பழைமையான சிவஞான பழனியாண்டவர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவில் ஸ்தானிகர் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    விழா குழுவினர் கோபால்துரை, கோபாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், சரவணன், கணேசன், காளிஸ்வரன், மதன், சங்கர், சுந்தர், வெங்கடேஷ், முத்துவேல் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

    • சிவகங்கையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி, 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 64 ஆயிரத்து 800 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் 2-ம் நிலை காவலர் தேர்வு பயிற்சி வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
    • இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தால் 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு சிறப்பு காவல்படை) 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிப்பணி யிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும். இணைய வழி விண்ணப்பம் செய்ய www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க பயன்படுத்தி கொள்ளவும்.

    இலவச பயிற்சி வகுப்பு களில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் இளைஞர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் சென்று முடிவடைந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் வீட்டுக்கு வீடு சோலார் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் வரவேற்றார். மாரத்தான் தியாகிகள் பூங்கா தொடங்கி திருப்பத்தூர் சாலையில் வழியாக ராம் நகர் கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் முடிவடைந்தது. இப்போ போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளை மருத்துவர் சிவகுமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஜாகீர்உசேன் கல்லூரியில் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற போட்டியை இளையான்குடியின் முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகமது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    அரையிறுதி போட்டியில் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணி, இந்நாள் மாணவர்கள் அணி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மற்றும் காரைக்குடி வித்யாகிரி கல்லூரி அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

    இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாண வர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் பரிசும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இந்நாள் மாணவர்கள் அணி 3-ம் பரிசும், ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் பரிசும் பெற்றனர்.

    பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்கு னர் காளிதாசன் வரவேற் றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரி யின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோரும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு கோப்பை களை வழங்கினர்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் செய்திருந்தார்.

    • கார்-ஆட்டோ மோதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தென்றல் நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது54). இவரது மனைவி ஜான்சி ராணி (46). இவர்களுக்கு ஜோஸ்னா என்ற மகளும், 1 1/2 வயதில் ஸ்டெபி என்ற பேத்தியும் உள்ளனர்.

    சம்பவத்தன்று குழந்தைசாமி தனது மனைவி, மகள், பேத்தி, உறவினர் கமலா ஆகியோருடன் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். காளையார் கோவில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஜான்சி ராணி, குழந்தை ஸ்டெபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். குழந்தைசாமி, ஜோஸ்னா, ஆட்டோ டிரைவர் சிவாஜி ஆகியோர் படுகாயங்களுடன் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக காளையார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த விஜயராணி (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர்- அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு கக்காட்டிருப்பு கலங்காத கண்ட விநாயகர், நயினப்ப விநாயகர், கலை உடைய அய்யனார் கோவில்கள் அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    கடந்த 18-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி யுடன் தொடங்கி 3 நாட்கள் யாகம் நடந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் 4-ம் கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று காலை 9.30 மணி அளவில் யாகசாலை பூர்ணகுதி நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கலங்காத கண்ட விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் நயினப்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து 11 மணியளவில் கலை உடைய அய்யனார் ேகாவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் யாக பூஜையில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் பங்கேற்றார், கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் பட்ட மங்கலம், பண்ணைதிருத்தி, திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டி, புதூர், வடமாவளி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழா விற்கான ஏற்பாடுகளை கலங்காத கண்ட விநாயகர் நயினப்ப விநாயகர் கலை உடைய அய்யனார் கோவில் நிர்வாகிகள் கக்காட்டிருப்பு ஊரார்கள் இளைஞர்கள் மற்றும் தரியம்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். விழாவில் கக்காட்டிருப்பு, திருக்கோஷ்டியூர், எம்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுப்போம்.
    • யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு கட்சி மாநாடு நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நீட் தேர்வு குறித்து தி.மு.க. உண்ணாவிரதம் இருந்து, அவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாக இருந்ததால் மக்களின் நம்பிக்கையை இழந்தது. தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். ஆனால் அவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆட்சி செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருப்பதால், எங்களை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுப்போம். கூட்டணி பற்றி பின்னர் தெரியும்.

    ரஜினிகாந்த் இமயமலை போய் வரும் வழியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். யோகி ஒரு துறவி என்பதால், அவர் காலில் விழுந்திருப்பார். துறவியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு வயது வித்தியாசம் இல்லை. முற்றும் துறந்தவர் பாதத்தில் ஆசீர்வாதம் பெற்றிருப்பார். யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார்.

    பா.ஜனதா ஊழல் இல்லாமல் மத்தியில் ஆட்சி செய்வதாக அண்ணாமலை கூறுவது குறித்து கேட்கிறீர்கள். ஊழல் உள்ளதா? இல்லையா? என்பதை வரும் தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கிகளின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • கலெக்டர் ஆஷா அஜித் தெரிவி்த்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (DDC HALL) அடுத்த மாதம் 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களு டைய விண்ணப் பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 தற்போதைய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணாக்கர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது என நூலக இயக்குனர் பேசினார்.
    • சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகத்தில் நூலகர் தின விழாவும், 'தொல்காப்பியச்செம்மல் தமிழண்ணலின் 95- வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    நூலகர் அகிலா வரவேற் றார். சிறப்பு விருந்தி னராக புதுக்கோட்டை மாவட்ட ஞானாலயா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் கிளை நூலகர் செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நூலக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

    நெற்குப்பையில் பிறந்த மும்மூர்த்திகளான அறிஞர் சோமலெ, தமிழண்ணல், சம்பந்தம் ஆகியோர் தமிழ் மொழி பற்றாளர்களாகவும், சமூக சிந்தனை உடைய வர்களாகவும், கல்விக்காக தங்கள் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணித்ததோடு பெரும் புரவலர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இந்நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கின்றேன். மேலும் இன்றைய இளைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டி ருக்கிறார்கள்.

    இதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. பெற்றோர்களாகிய நாம் என்னதான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் உலக அறிவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு வருக்கும் கற்றுத் தருவதும் அதன் மூலம் பல சாத னைகள் புரிந்திட வழிவகை செய்வதும் இந்த நூலகம் தான். எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு பெரிய அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் சமூக சிந்தனை உடையவர் களாகவும் மாற அன்றாட வாழ்வில் நீங்கள் நூலக தொடர்புடையவராக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நல் மாணவ வாசகர் களுக்கான விருதுகள் நெற்குப்பை நூலகத்தை நன்கு பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

    இதில் சோமலெ சோமசுந்தரம், பேராசிரியர் விஸ்வநாதன், சிவகங்கை மாவட்ட நூலக கண்காணிப் பாளர் சு.சண்முக சுந்தரம், மாவட்ட நூலக இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பங்குபெற்றனர். நிறைவாக சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    • பேரூராட்சி மன்றத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழைய வணிகவளாக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டும் என்றும், புதிதாக வியா பாரம் தொடங்கு பவர்கள் எங்களுக்கு தான் கடைகளை விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய நிலையில் யாருக்கு கடைகளை விடுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சி னையை வியாபாரிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

    வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த காரணத்தினால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டதது. இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி இக்கடை களுக்கான ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) மீண்டும் நடைபெற உள்ள இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதோடு கடைகளை திறக்க ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வீடு புகுந்து தொழிலதிபரை வெட்டினர்.
    • முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் கே.கே. நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    முகமூடி கொள்ளையர்கள்

    கடந்த மாதம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் செல்வராஜ் கொள்ளையர்களை பார்த்தவுடன் கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு கூடினர். இதை கண்ட கொள்ளையர்கள் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2-வது முறையாக அப்பகுதிக்கு இரவு காரில் வந்த கொள்ளை யர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.

    அரிவாள் வெட்டு

    மேலும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் செய்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    பொது மக்கள் அச்சம்

    மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடி நடவடிக்கை எடுத்து முகமூடி கொள்ளை யர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.

    ×