search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டம்
    X

    கோவையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டம்

    • மருத்துவ அறிக்கை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் புகார் அளித்தனர்.

    கோவை,

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்குள் புகுந்து, அங்கு பணியாற்றிய நர்சுகளை மிரட்டிய மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு ஆஸ்ப த்திரி வளாகம் முன்பு 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இன்று காலை திடீர் தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சையின் போது இறந்து விட்டார்.

    இது தொடர்பான மருத்துவ அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வினோத் என்பவர் 5 பேருடன் சம்பவத்தன்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர் நேராக கர்ப்பிணிகள் வார்டுக்குள் சென்று, அங்கிருந்தவர்களை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணியாற்றிய நர்சுகள் கேட்ட போது, அவர்களை மிரட்டியுள்ளார்.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரிகளிடம் டாக்டர்கள் புகார் அளித்தனர்.

    ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×