search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தை வசூல் விவகாரம்: கணவர் பேசிய ஆடியோ வெளியானதால் கோவை மேயருக்கு சிக்கல்
    X

    மேயரின் கணவர் ஆனந்தகுமார்.

    வாரச்சந்தை வசூல் விவகாரம்: கணவர் பேசிய ஆடியோ வெளியானதால் கோவை மேயருக்கு சிக்கல்

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
    • கோவையில் மேயரின் கணவர் வாரச்சந்தை வசூல் தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சி மேயராக கல்பனா உள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார்.

    கோவை மணியக்காரன்பாளையத்தில் கோவிலுக்கு அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை கடை போடுபவர்களிடம் தனி நபர் ஒருவர் கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று கட்டணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த கட்டணத்தை இனி தனது ஆட்கள் வசூலிப்பார்கள் என செல்போனில் மேயரின் கணவர் ஆனந்தகுமார் கூறுவது போல் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    இந்த ஆடியோவில், குமார், சம்பத் ஆகியோர் பேசுகின்றனர். அதில் குமார் என்பவர், சம்பத்திடம், உங்களிடம் ஆனந்த் அண்ணா பேச வேண்டும் என்று தெரிவிக்கிறார். அவரிடம் போனை கொடுக்கிறேன் என கூறுகிறார்.

    அப்போது ஆனந்த குமார் எதிர்முனையில் இருக்கும் சம்பத்திடம், அடுத்த வாரத்தில் இருந்து சந்தை கடையில் நம்ம ஆட்கள் வசூல் செய்துகொள்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்.

    அதற்கு எதிர்முனையில் பேசுபவர் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் கோவில் கமிட்டியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார். அதற்கு கோவில் கமிட்டியிடம் நாங்கள் பேசிக்கொள்கிறோம். சனிக்கிழமை நீங்கள் வசூலிக்க வேண்டாம் என்று ஆனந்த குமார் சொல்வது போன்று ஆடியோ நிறைவடைகிறது.

    இந்த ஆடியோ வேகமாக பரவி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

    இந்தநிலையில் கோவையில் மேயரின் கணவர் வாரச்சந்தை வசூல் தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த ஆடியோ விவகாரத்தை மேயருக்கு பிடிக்காத சிலர் தி.மு.க.வின் மேலிடத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேயரிடம் கட்சி மேலிடம் விசாரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் மேயருக்கு இந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மேயரின் கணவர் ஆனந்த குமார் கூறியதாவது:-

    மணியக்காரன்பாளையத்தில் கோவில் இடத்தில் வாரச்சந்தை அமைத்து, கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் அது கோவில் இடம் இல்லை என்பதும், வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டை பகுதி என்பதும் தெரியவந்தது.

    ஆனால் சிலர் அதனை கோவில் இடம் என்று கூறி பணம் வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி தகவல் வந்ததும், அந்த பகுதியை சேர்ந்தவன் என்ற முறையில் நான் விசாரித்தேன். அப்போது கோவில்காரர்கள் வசூலிக்கவில்லை என்பது தெரியவந்தது.

    கோவில் இடம் என்றால் கோவில்காரர்கள் வசூல் செய்துகொள்வார்கள் என்று கடந்த 3 ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது தொடர்பாக நேரில் தான் பேசினோம். போனில் எதுவும் பேசவில்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் நான் மேயரின் கணவர் என்பதால் இதனை சிலர் அரசியலாக்கி, இந்த சம்பவத்தை பெரிதாக மாற்றி விட்டனர். மேலும் நான் பேசாததை பேசியதாக கூறி ஆடியோவையும் பரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில தினங்களாக நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×