search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் திருமணமான 21 நாளில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்
    X

    கோவையில் திருமணமான 21 நாளில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்

    • கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
    • திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.

    கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கி கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.

    ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கி கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம் பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×