search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிவந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்
    X

    உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிவந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

    • பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள்.
    • சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை, வீரகனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், வேலூர், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 460 காளைகள் பங்கு பெற்றது. மேலும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் கால்நடை மருத்துவர்களும் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்ட பிறகு மைதானத்துக்குள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். முதலில், வாடிவாசலில் இருந்து ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் வாடிவாசலில் இருந்து களத்துக்குள் இறங்கின. ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சீறிப்பாய்ந்து வந்த சில முரட்டு காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் மிரண்டு ஓடினர். திமிலை உயர்த்தி திமிராய் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.

    பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள். அதேநேரத்தில் சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.

    அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும் குக்கர், சேர், நான்ஸ்டிக் தவா, வெள்ளி நாணயம், ரொக்க பரிசு மற்றும் சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசு, மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உலிபுரம், தம்மம்பட்டி, ஆத்தூர் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.

    Next Story
    ×